Monday, 8 September 2025

கிணற்று தவளை

1983 -ல் ஏழு தெருக்களும், ரெண்டு கோயிலும், சின்னதா ஒரு ரேஷன் கடையும், ஒரு பெரிய மளிகை கடையும், கொண்டதொரு சராசரி எம்.ஜி.ஆர் காலத்து கிராமந்தான் எங்க ஊரு. இது தவிர அதே எம்.ஜி.ஆர் புண்ணியத்துல கொஞ்சம் தார் ரோடு, மூணு அடிபம்பு, சுமார் முப்பது குண்டு பல்பு, ஒரு லைப்ரரி, இப்படி சில வசதிகள்லாம் இருந்துச்சு.

மழகாலத்துல ஊருல வடகிழக்கா தண்ணி ஓடும், அதுல நாங்க விட்ட பணங்குடுக்கையோட சேர்ந்து தார் ரோடு அடிச்சிக்கிட்டு போயிடிச்சி. வீட்டுக்கு வீடு கெணறு இருந்ததாலயும், அதுல அப்போல்லாம் நல்ல தண்ணி இருந்ததாலயும், அடிபம்பு மாடு முதுகு சொரிய ரொம்ப ஒதவியா இருந்துச்சி. எட்டாங்கிளாஸ் படிச்சிகிட்டிருந்த இருந்த எங்களோட மாமா, சித்தப்பா இவுங்களோட, ஒலிம்பிக்ஸ்ல தீவிரமா சேரும் முயற்சியால முக்தியடஞ்சது தான், அந்த முப்பது சுமார் குண்டு பல்பும்.

இதுல அந்த லைப்ரரிக்கு மட்டும் எங்க ஊர்ல ஏக மரியாதை! காரணம், அறிவு களஞ்சியமாய் அதில் கொட்டி கிடந்த 'இந்தியாவின் மாநிலங்களும் தலைநகரங்களும்', 'நாடு வளம் பெற 'பஞ்சாயத்தி ராஜ்', 'பயோகேஸ் - வளமான எதிர்காலத்திற்கு' போன்ற இந்தியின் சங்கை திருகி தமிழுக்கு கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் பதிப்புகளோ, 'கடல் புறா', 'யவன ராணி', 'பொன்னியின் செல்வன்', 'பொன்னர் சங்கர்' போன்றவர்களோ, 
'எழுத்தின் கதை', 'ஆங்கிலம் - தமிழ் லிப்கோ டிக்ஷனரியோ' கூட கிடையாது.


ஊர்க்காரகளோட எகோபித்த மரியாதையை பெற்றது லைப்ரரியில் நடுநாயகமாய் உட்கார்ந்திருந்த, சுமார் ஒன்னேமுக்கால் அடி உயரம் ரெண்டடி அகலம், ரெண்டு கண்கள், ஒரு பெரிய நெற்றிக்கண், பக்கவாட்டிலிருந்து அனுமார் வால் மாதிரி நீண்டு, கூரை மேல வளைச்சி வைக்கப்படிருந்த, அலுமினிய கம்பிகளில் கட்டபட்ட தட்டையான பிளாஸ்டிக் கயிறும், நீல நிற கண்ணாடி வயித்தையும் உடைய விஞ்ஞான அதிசயம்!

"நாங்கல்லாம் டிவி பாக்க போறோம்"

என்று சில்வண்டுகள் எல்லாம் கோரசாக கத்திக்கொண்டு ஓட,

"அப்பா வரதுக்குள்ள ஒழுங்கு மரியாதையா வந்து சேருங்க"ன்னு 

க்ரீச்சிட்ட அம்மாவோட குரல் பக்கத்துக்கு பாக்டரி அஞ்சேமுக்கால் சங்கு சத்தத்துல அமுங்கி காணாம போகும். காணாமல் போன 'சற்று மனநிலை சரியில்லாதவரை' தேடும் அலுவல் அதிகாரி, எ 1 பாசிடிவ் இரத்தம் 6 யூனிட்டுகள் கோரும் பெண்மணி, நாளைய நிகழ்சிகள், குடும்ப கட்டுபாட்டில் நிரோத் உபயோகம் குறித்து தமிழ் பேசும் வடநாட்டவர், நடுநடுவே ஹார்லிக்ஸ், அனாசின், நுரை வளம் பொங்கும் நிர்மா என்று எதை காண்பித்தாலும் கண் கொட்டாமல் கண்டுகளிக்க நேயர்கள் உண்டு.

கொஞ்சம் கொஞ்சமாக விவித் பாரதியின் வர்த்தக ஒலிப்பரப்பிர்குப் போட்டியாக தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் பள்ளிக்கூடம், ரேஷன் கடை, ஊர் பொதுக்கெனறு போன்ற இடங்களில் பிரஸ்தாபிக்கப் பட்டன. 

"நேத்து ஒளியும் ஒலியும் பாத்தியாடி? லட்சுமியும் சிவகுமாரும் மழைல ஆடுனத?" 

"சிவகுமாரு எங்கடி ஆடுனாரு? லட்சுமி ஆடும் போது சும்மா சும்மா அது கைய புடிச்சி மூஞ்ச மூஞ்ச பாத்துனு இருந்தாரு"

"இந்த 'வயலும் வாழ்வு'த்துல வரவன் எல்லாம் பயிர் செய்றவன் மாதிரியா இருக்குறான்? நேத்து வந்தவன், பக்கத்துக்கு ஊரு ரைஸ் மில் ஒனரூ கணேசனாட்டம் வாச்சு மோதரமெல்லாம் போட்டுருந்தான், பத்தாததுக்கு அத சொம்மா காமிச்சு காமிச்சு 'மகசூல்' 'மனிலான்னு' எத்தையோ பேசறான்"

"அவன் தஞ்சாவூர் காரண்டா, அவன் கழனி இங்கேருந்து ஆரம்பிச்சு பாட்ட காலன் குட்ட வரிக்கும் இருக்கும், நம்மள மாதிரி சோப்ளாங்கி மாடு இல்ல, அவன் ஜீப்புல ஏறு உழுவான்"

"அது ஜீப்பு இல்லைடா டிராக்குடரு..."

இப்புடி நீளும் பேச்சு.

டோட... டொட டொய்ன்... ... ... ன்னு தூர்தர்ஷன் லோகோவில் 30 பேருடன் ஆரம்பமாகி கடைசியா திரையில் முகங்களற்று, 'புஸ்ஸ்..' சத்தத்தோட கொசு பறக்கும் போது 5 பேரோட முடியும். இதுக்கு நடுவுல ஹெச். ராமகிருஷ்ணன், 'ஈரோடு' தமிழன்பன், சோபனா ரவி, வரதராஜன் போன்றோர் உலக செய்திகளை ஊருக்குள் கொண்டு வரும் போது சுமார் 100-த்து சொச்சம் ஊர்ஜனம் உள்ளூர் செய்திய தங்களுக்குள்ள பரிமாரிக்கும். டிவி செய்தி முடிஞ்சதும் இவுங்க செய்தியும் முடிஞ்சிடும்!

சில சமயம் லுங்கி கட்டுன பெரிய அண்ணனுங்கள்லாம் சின்ன பசங்கள முதுகுல போட்டு "ஒடுங்க வீட்டுக்கு, போய் படிங்க" ன்னு ரொம்ப அக்கறையா தொரத்தி விட்ருவாங்க. அதுக்கப்புறம் அவங்க பத்த வெக்குற பீடி சிகரட்ட பாத்து மிச்சமிருக்குற இருக்குற பெருசுங்க எடத்த காலி பண்ணிடும். டிவி ஒரு பக்கம் ஓட இவுங்க பேச்சு வார்த்த சாரயக்கடை, பக்கத்துக்கு ஊரு பொண்ணுங்க, அரசியல், டென்ட் கொட்டாயில போட்ட புதுப்படம் இப்படி நாலாபக்கமும் ஓடும். நடுவுல இந்தி நியூஸ் படிக்கிற ஆண்டியோட 'கை' வெக்காத ஜாக்கெட்ட கொஞ்ச நேரம் பாத்துட்டு திரும்பவும் பேச்சுவார்த்த தொடரும். அறைபடி சோத்த மீன் கொழம்போட சேத்து முழுங்கிட்டு, பெரிய ஏப்பத்தோட தர்மலிங்கம் வந்து 'டிவி'ய படக்குன்னு அணைச்சிட்டு ஷட்டர இழுத்து பூட்டு போட்டதும், ஒரு பத்து வினாடி அமைதி நிலவும். அப்பறம் 'சரி மச்சி காலில பாப்போம்' ன்னு ஒட்டு மொத்தமா எல்லா லுங்கியும் வீடு நோக்கி மெல்ல நடக்கும்.

ஊர் பெரியவரான குணசேகரன், ஊர் எல்லையில கறிக்கடை வெச்சிருந்தாரு. அவருக்கு ஒரே மகன், சேட்டு என்கிற சேதுராமன். மொதல்ல பாத்த லுங்கிகள்ல இதுவும் ஒன்னு, ஆனா என்ன? கிழிசல் விழாத லுங்கி இது. கூட சுத்துற பசங்களுக்கு சிகரெட்டு தண்ணி கறின்னு எல்லாத்தையும் வாரி வழங்குற புண்ணியவான். அவனோட தேவையெல்லாம் இந்த மாதிரி ஒரு நாலஞ்சு பேரு கூடவே சுத்தணும். அவங்க காட்டும் சின்சியாரிட்டிக்கு தகுந்த சன்மானம் கெடைக்கும். ரயில்வே போலிஸ்காரர் ஆரோன் மகன் ராபட், சேட்டோட நிழல் மாதிரி கூடவே சுத்துறவன், இத்தனைக்கும் இவனுக்கு தம்மு தண்ணி பழக்கம் கெடயாது.

ஊரைவிட்டு தள்ளி இருக்குற பழைய ஆர்மி கேம்ப் அப்போதைக்கு வெறும் பொறம்போக்கு நெலமாதான் இருந்தது (பிற்காலத்துல ஜானகிராமனும் அவன் தோஸ்து அன்பரசனும் அதுங்கள மடக்கி ப்ளாட்டு போட்டு விக்குற வரைக்கும்). அதுக்கு நடுவுல ரெண்டாம் உலகப்போரின் போது கட்டுன ஒரு பழைய வாட்டர் டேங்க் இருந்தது. சேட்டும் ராபட்டும் மட்டும் தனியா ஒக்காந்து பேசற இடம் இது.

பக்கத்துக்கு டவுன் ஓட்டல்களுக்கு கறி சப்ளை செஞ்சி வசூல் பண்ற பொறுப்ப குணசேகரன் தன் மகனுக்கு கொடுத்திருந்தார். கூடவே போற ராபட்டும் இவனும், வசூல் முடிஞ்ச கையோட, போஸ்ட் ஆபீஸ் பக்கத்து பொட்டிகடைல தயங்கி தயங்கி நின்னு 'அந்த' புத்தகங்கள வாங்கி நேரா போற இடம் இந்த மேல சொன்ன வாட்டர் டேங்க்தான். கமுக்கமா அதுக்குள்ள ஒக்காந்து ஒரு வரி விடாம படிச்சிட்டு நரம்பு முருக்கேருண கையோட வீட்டுக்கு போவானுங்க.நாளைடிவில மத்த ஓட்ட விழுந்த லுங்கிகளுக்கும் இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமா தெரிய ஆரம்பிக்க, இந்த ரெட்ட பிறவிங்க இல்லாத சமயம் பாத்து மத்தவனுங்களும் தண்ணி டேங்க் ஏற ஆரம்பிச்சானுங்க.

எப்படியும் ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் பாத்து தானே ஆவனும்?. அந்த நாளும் வந்து சேந்தது.

குமரேசன், ஏழுமலை, கதிரேசன் மூணு பேரும் சேட்டும் ராபட்டும் இல்லாத நாளா பாத்து, நல்ல உச்சி வெய்யில்ல பாக்கட் சாராயம், காராசேவு, பீடி கட்டு சகிதமா தண்ணி டேங்குக்குள்ள செட்டில் ஆயிட்டானுங்க. அங்கேயிருந்த எல்லா புத்தகத்தையும் எழுத்துகூட்டி ஒன்னொன்னா படிக்க ஆரம்பிச்சி கூடவே சரக்கும் காராச்சேவுமா அந்த கச்சேரி நடந்தது. போகப்போக எல்லாருக்கும் மப்பு தலைகேற தங்களோட முக்கால் மயக்க உரையாடலை ஆரம்பிச்சுடானுங்க, பக்கத்து ஊரு பொண்ணுங்கள டாவடிச்சதால, கதையில வர கதாபாத்திரதோட அவுங்கள ஒப்பிட்டு படு நாராசமா பேச்சு போகுது.

ஆடு மேச்சிட்டு அந்த வழியா வழக்கமா ஊர் திரும்புற கோவிந்தனுக்கு இவனுங்களோட சிரிப்பும் பேச்சும் வினோதமா (எதிரொலி) கேக்க. 

"அய்யய்யோ பேயீஈஈஈஈஈ.. ... ...."ன்னு

கத்தினு ஊர நோக்கி ஓடுறான். ஆடுங்கல்லாம் அவன் பின்னாடி ஓட்டமும் நடையுமா புழுக்க போட்டபடி ஓடுது. அந்த நேரம் எதிர்ல வந்த சேட்டு கோவிந்தன புடிச்சி என்னான்னு கேக்க 

"வாட்டர் டாங்கில பேய் கத்துது.. " 

நிக்காம கூட ஓடுனான் ஆட்டுக்காரன். அரநிமிசம் ஒன்னும் புரியாம நின்னவன் திடீர்னு 

"டேங்க்லயா..?"ன்னு

தன்ன தானே கேட்டுகிட்டு எதிர்புறமா ஓடுறான். நல்லா பொழுது சாயுற நேரம், அரையிருட்டுல கல்லு, மண்ணு, ஒன்னும் தெரியாம ஓடுறான். சாதாரணமா ஒரு ஆட்ட பாத்தாலே அத அமுக்கி போட்டு கறியாக்குறவன், கோவிந்தனோட என்பது சொச்சம் ஆடுங்களையும் துச்சமா மதிச்சி அதுங்கள தாண்டி ஓடுறான். சுமார் கால் கிலோமீட்டர் தூரத்துல அவன் பாத்த காட்சி, அப்புடியே நெஞ்சு வாய்க்கு வந்திருச்சி அவனுக்கு, டேங்க் மேலிருந்து ஒரே புகையா போகுது! கிட்ட நெருங்க நெருங்க ஒரே அலறல் சத்தம், நிக்காம ஓடி, அந்த துருபுடிச்ச ஏணி கால கிழிச்சது கூட தெரியாம மூச்செரைக்க அதுல ஏறுறான். உச்சியில்ரிந்து அவன் பாத்த காட்சி, வெறும் ஜட்டியோட மூணு பாவிகளும் "சேட்டே... ... தூக்குடா... தூக்குடான்னு..." கத்துறானுங்க.


தொடருதான்னு பாப்போம்... ... ...

Monday, 10 April 2023

உயிர்த்துளி!



பாலை நிலத்தில் விழுந்த விதை

நாளும் பொழுதும் உழலும்.

பயனற்ற அதன்மேல் புழுதி மண்டும்


கண்களுக்கு எட்டாத தொலைவில்

கதிர் ஒளியில் காற்றின் கைபிடித்து

வானேறும் ஒரு திவலை!         


இருட்டு வரும் பின் வெளிச்சம் வரும்

விதை மண்ணோடு மண்ணாகும்

கல்லாகும் அதன் மனமும்


வான் மிதக்கும் வெண்முகிலில்

ஏறிய உயிர்துளி கடல் கடந்து

மலை கடந்தும், தொடரும் தன் பயணம்


கைதூக்கி விட்ட காற்றே கட்டுடைத்து விட

கானல்நீர்ப் படுகையில் கருத்த மேகமது

களையும் முன்னம் கணநேரத்தில்


ஒருதுளி மட்டும் செங்குத்தாய் 

மண்ணான விதையின் மார்பில் 

வந்து விழும். விதை உயிர்க்கும்!

முதல் காதல்

 புன்னகை பூக்கள் பூத்தாலும்

வார்த்தை சருகொன்றும் உதிர்ந்ததில்லை


கண்கள் கொள்ளையடித்தாலும் 

கைகள் கயமை பழகியதில்லை


ஸ்வாசம் தாண்டி அவளுடைய

ஸ்பரிசம் வேறு கண்டதில்லை


முன்னமொரு பிராயம் எனினும்

முள்ளாய் மனதில் முதல் காதல்.

Wednesday, 7 October 2015

கற்பனை குதிரையும் ஓர் இயந்திரப்பறவையும் - II

ஒரு மாநகரத்தின் அருகில் இருந்தும், கிராமத்தின் சாயல் பெரிதும் மாறாத ஊர் எங்கள் ஊர். சென்னை எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் எங்கள் ஊரை அந்த வளர்ச்சி ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த ஊருக்கு சிறப்பே அதன் அருகில் அமைந்திருக்கும் பல முக்கியமான இராணுவம் சம்பந்தமான தொழிற்சாலைகள் அல்லது மண்டல கட்டுப்பாட்டு மையங்கள். தினமும் காலையில் டடடடடட...... என்று ஏ.கே.47 அல்லது இன்சாஸ் ரைபிள் வெடிக்கும் சத்தத்துடன் எழுவது இங்கு வாடிக்கை. திடீரென்று பீரங்கி குண்டு வெடித்து (இராணுவ தளவாட பரிசோதனை தான்) அது ஏற்படுத்தும் அதிர்வலைகள் இந்த பகுதி மக்களுக்கு புதிதல்ல.


இதெல்லாம் ஒருபுறமிருக்க, எப்பொழுதாவது, அத்தி பூத்தாற்போல் அருகில் இருக்கும் இராணுவ விமான பயிற்சி நிலையத்திற்கு வந்திறங்கும் ஹெலிகாப்டர் ஒரு மகத்தான ஆச்சரியம். பி ஆர் சோப்ராவின் ஞாயிற்றுக்கிழமை நாடகங்களில் (இராமாயணம், மஹாபாரதம்) வருவது போல் 'எங்கு வேண்டுமானாலும் பறந்து சென்று இறங்கலாம்' என்ற கனவை ஹெலிகாப்டர் நிஜமாக்குவது ஆச்சரியம் தானே?! இதனை மிக அருகில் காண கிடைக்கும் வாய்ப்பை, விமானத்தில் பறக்கும் நபர்கள் கூட விரும்பாமல் இருக்க மாட்டார்கள். எங்கள் ஊர் பொடியன்களுக்கு கேட்கவேண்டுமா என்ன?

அந்த நாளும் வருகிறது!

தூரத்தில் அந்த சப்தம் மெலிதாக கேட்கிறது. வீட்டு நிலக்குழியில் புதிதாக வாங்கிய நீல நிற கோலிகளை போட்டு, அவை எழுப்பும் வினோதமான ஒலியை, முன்வரிசை பற்கள் தெரிய ரசித்துக் கொண்டிருந்த ரமணி, இந்த புது சப்தத்திற்கு, புலியின் காலடி சலசலப்பிற்கு வெருண்டு சடாரென தலை தூக்கும் மான் போல், எழுந்து நிற்கிறான்.

அவன் பின்புறமாக திரும்புகையில், அதற்குள் தரை அதிர திமுதிமுவென்று தெருவில் வேகமாக ஓடும் சிறுவர்கள்.

'இன்று எப்படியாவது கிட்டத்தில் பார்த்துவிட வேண்டும்'

 ஒரு வினாடியின் கீற்றில் இதை தீர்மானித்தவன், நடு வீட்டிலிருந்து தாவி முன்கட்டை அடைகிறான். அவன் தாத்தா அங்கே புகைத்து வீசியிருந்த பீடித்துண்டை மிதித்து கடந்து, முன்வாசலை அடைந்தபோது, பளிரென்ற சித்திரைமாத சூரியன் அவனை வரவேற்கிறது.


அங்கிருந்து தெரு நன்றாக தென்பட, அவனுக்கு முன்பு இப்பொழுது மூன்று சிறுவர்களும், அவர்கள் பின் அழுதபடி வெயிலில் கால் தகிக்க 'அண்ணா ஆஅஆ....' என்று கதறிக்கொண்டோடும், அந்த மூவரில் யாரோ ஒருவனின் தங்கையும் தவிர வேறு யாருமில்லை. இது போதும், இன்னும் பக்கத்து தெரு பையன்கள் யாரும் வரவில்லை, கண்கள் பளிச்சிட, இந்த ஒன்றரை மைல் தூரப் பயணத்தின் முதல் இரண்டு அடிகளை  எடுத்ததும், வீட்டு வாசலில் பழுப்பு நிறத்தில் ஒன்று நீல நிறத்தில் ஒன்று என இவன் ஜோடி சேர்த்து வைந்திருந்த செருப்புகள் இவனை ஏக்கமாக பார்த்தன. அந்த நேரம், தெருவிலிருந்து இன்னும் ஐந்து சிறுவர்கள் ஓட்டமாக இவன் வீட்டை நெருங்கி, அங்கே அவன் வேகம் குறையவிடாமல் தொடர்ந்து ஓட காரணமானார்கள். குறுக்ஷேத்திர அர்ஜுனனின் தீர்மானத்துடன் தெருவில் இறங்கி, 'வாயுவேக, மனோவேகத்தில்', அந்த தலை கலைந்த சிறுமியை கடந்து ஓடுகிறான்.

இன்னும் ஆறு தெருக்களைத் தாண்ட வேண்டும், அதன் பிறகு, எப்போதாவது ஒற்றை மிலிட்டரி லாரி கடக்கும் தார்சாலை. அங்கிருந்து சரியாக 300 அடி தொலைவிற்கு சற்றே செங்குத்தாக ஏறும் பாதை. அந்த இடத்தில், சாலையின் அடியில், கோடை வெயிலில், கொதிக்கும் நீரோடும் சிறு ஓடை. அதன் போக்கில் இன்னுமொரு நூறடி சென்றால் அங்கே கண்களுக்கெட்டிய தூரம் வரை நீளும் மதில் சுவர். நீரோடை வளைந்து திரும்பும் இடத்தில சுவற்றுக்கு அடியில் தரைக்கும் சுவற்றுக்கும் இடையில் மூன்றடி இடைவெளி. அதனுள் நுழைந்து வெளிப்படுகையில், செந்நிறத்தில் மண் முகடுகள். அவற்றை ஏறிக் கடந்ததும் சற்று தொலைவில் தென்படும் சாம்பல் நிற கான்க்ரீட் சாலை, இடையில் முட்புதர்களுக்குள் வளைந்து ஓடும் சரிவான பாதை...

இதைத்தாண்டி அவன் போன முறை போகவில்லை. அதற்குள் ஏமாற்றத்துடன் திரும்பும் பையன்களைப் பார்த்ததும் ஓட்ட வேகம் குறைந்து, சோக நடையுடன் வீடு திரும்பினான்.
ஆனால் 'இந்த முறை அப்படி ஆகாது, பென் ஜான்சன் (Ben Johnson) போல் வேகமாக ஓடி, இவர்களுக்கு முன் பார்த்து விடுவேன்', என்று தனக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறிக்கொண்டு, தனது எண்ண ஓட்டத்தை செயல்படுத்த கால்களுக்கு கட்டளையிட்டான். அவன் 

முன்னால் ஓடும் மூவரும் அதே வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

'இது ஒரு விதத்தில் நல்லது' என்று அவன் மனம் சொல்லிக்கொண்டது.

சென்ற முறை அவனுக்கு முன் ஓடிய வேறொரு கும்பல் வேகத்தை அடிக்கடி குறைத்தும், நின்றும் திரும்ப சடாரென்று ஓடியும், பின்தொடர்ந்த இவனை குழப்பினார்கள். இதனாலேயே தனது இலக்கை அன்று அடைய முடியவில்லை என்று அவன் நம்பினான். அது மட்டுமின்றி அப்பொழுது முழு ஆண்டு தேர்வு நடந்துக்கொண்டிருந்தது.

"ஒழுங்கா பரீட்சைக்கு படிக்காம ஊர் சுத்துரியா?"

என்று, கையில் தடியுடன், கேட்கும் அப்பாவின் கோபமான 'போஸ்' அடிக்கடி நினைவில் வந்து தொல்லை தந்தது. ('மேத்ஸ்' என்றாலே அவனுக்கு கிலி). ஆனால் இப்பொழுது அவனது எண்ணத்தை சிதறடிக்க எதுவும் இல்லை.

இந்த பயணத்தின் 55 ஆவது நொடியில் அவன் மூன்றாவது தெருவை அடைந்திருந்தான், அங்கே முன்னே சென்றவர்கள் ஏற்படத்திய பேரரவத்தில், தெருவோரம் நாக்கை தொங்க விட்டபடி வெய்யிலில் இளைப்பாறிக்கொண்டிருந்த, அந்த தெரு நாய்கள் முதலில் குறைக்க ஆரம்பித்து பிறகு விழித்துக்கொண்டன. நல்ல வேளை, அவை வெறும் குறைக்கும் நாய்கள் தான். தலை தெறிக்க ஓடிய இந்த பொடியன்களை நோக்கி தங்கள் மொழியில் வசைசொற்கள் வீசுவதோடு நிறுத்திக்கொண்டன. பின்னால் சென்ற ரமணியும் அவற்றின் வசைகளுக்கு ஆளானான்.

இந்த ஊர் பையன்களின் 'பய' அகராதியில் நாய்கள் அவ்வளவாக கிடையாது, ஆனால் ஆடுகள் உண்டு! காரணம் 140 சொச்சம் ஆடுகளை வைத்திருக்கும் ஏழுமலை, மகா முரடன். கையில் எப்போதும் சின்ன அருவாள் பொருத்திய கெடையுடன் காணப்படுவான், அவற்றை வைத்து ஆடுகளுக்கு 'தெகை' ஒடித்துப்போடுவது மட்டுமின்றி, அவன் ஆடுகளை நெருங்கவரும் எதையும் யாரையும் காயப்படுத்த முடியும். இந்த கூற்றை அடிக்கடி அவன் மெய்ப்பித்திருக்கிறான். அதனால் ஊர் பையன்களுக்கு ஆடு என்றாலே பிரியாணி ஞாபகம் வராமல், அருவாள் தான் நினைவில் நின்றாடும்.

அடடே... .... .. இதற்குள் பையன்கள் எல்லோரும் ஆறாவது தெருவையும் தாண்டி விட்டார்களே. இனிமேல் இவர்களை மட்டும் பின் தொடர்வோம், ஆட்டுகாரனை பற்றி பிறகு பார்க்கலாம். 

Saturday, 9 August 2014

கற்பனை குதிரையும் ஓர் இயந்திரப்பறவையும்


ப்ளாக் எழுதவேண்டும் என்ற என்னுடைய நீண்டநாள் அரிப்பை சொரிய ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது. அலுவலகத்தில் எல்லா வேலைகளையும் கொஞ்ச நாள் 'மறு உத்தரவு வரும் வரை' கிடப்பில் போடச்சொல்லி எங்கள் மேலதிகாரி காதில் தேன் ஊற்றினார், "ஆனால் வீட்டில் இருக்கக் கூடாது, வேலைக்கு வரவேண்டும்" என்று இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் அடுத்த செய்தியையும் சொன்னார். 

ஏ.ஸி குளிரில், சொகுசான சீட்டில், அவ்வப்பொழுது டீ அல்லது காபி, நொறுக்குத்தீனி, உலகத்தையே கண் முன் கொண்டுவரும் கணினி, இதைவிட என்ன வேணும்?! (இதுல சம்பளம் வேற).

"அமுக்குடா ஆக்ஸிலேட்டர" என்று மனம் சொன்னாலும், நான் 'கற்பனை குதிரை'யேறி தான் இந்த பயணத்தை தொடர வேண்டும். அதுவோ "'யு ட்யுபில்' (youtube) எதையாவது பார்" என்று கூறி சோம்பிக்கிடந்தது. சரி கழுத அது படுத்தமேனிக்கு கிடக்க, விடாமல் அதன் முதுகில் அமர்ந்து, இன்டர்நெட்டில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை (மிக முக்கியம், மேலதிகாரி கண்ணுக்கு எட்டாத தூரம்) எல்லா உலக ஞானத்தையும் பெரும் முயற்சியில் ஈடுபட்டேன்.

இனிமேல் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை அல்லது 'தெரியவில்லை' என்றானபோது, என் கற்பனை குதிரை மெதுவாக
எழுந்து
             நின்று
                       பிறகு மெல்ல நடக்க ஆரம்பித்தது.

அதற்குள் டீயும் வடையும் வந்துவிட, சற்று ஒய்வு அப்புறம் வடையுடன் ஒரு நடை. இப்படியாக ஐந்து தேநீர் குவளைகளையும் அரை டஜன் வடைகளையும் கடந்திருக்கும் போது, காலவெள்ளத்தில் என் கற்பனை குதிரை நீந்த ஆரம்பித்திருந்தது. மிகச்சாதாரணமாக அது எதிர்நீச்சல் போட்டு, பின்னே பின்னே.. ... அந்த ஆனந்தமான 80பதுகளில் போய் மேய ஆரம்பித்தது.

'ஆட்டோ' சங்கர், PT உஷா, வளைகுடாப்போர், லாட்டரி சீட்டு, மலிவு விலை மது, திரைமலர், காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு, அலுமினிய கோல்கேட் பேஸ்ட், பாண் பராக், லிஜ்ஜட் பாப்பட், பவர் ஷூ, கபில்தேவ், குமரகுருபரர், பீம் பாய் பீம் பாய்,  'ஏக் தோ தீன் சார் பான்ச் சே... ... தஸ்ஸு க்யாரா...'  என்று கண்ட இடங்களில் மேய முயற்சி செய்தது. இனிப்புக்கடையில் பூட்டிவைத்த திருடன் போல், அதற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை, இளித்த வாயுடன் என்னை திரும்பிப் பார்த்தது.

இனி மேய்ந்த கதை ... ... ...